இவ்வலைப்பதிவை எழுத துவங்கும் போது எனது பிள்ளை பிராய கனவு ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. அது ஒரு கனா காலம், ஆம் கிராமத்து சுழலில் நான் வளர்ந்த பள்ளி பருவம். ஒரு அதிகாலை வீட்டு கூடத்தில் படுத்திருந்தபோது என்னுள் ஒரு உணர்வு, யாரோ சதிகாரர்கள் என்னை கொல்வதற்காக வீட்டு முற்றத்தில் கோழி தன் குஞ்சுகளை அடை காப்பதற்காக வைய்திருந்த கவிழ்த்த கூடையினுள் வெடிகுண்டு வைத்திருப்பது போன்று. சட சடவென எழுந்து சென்று கூடையை திருந்தபின் தான் தெரிந்தது அதுவொரு கனவு என்று. வீட்டில் தூங்கிகொண்டிருந்தவர்கள் விழித்ததுததான் மிச்சம. இப்போது நினைத்தாலும் நகைப்பு தான் வருகிறது. சதிக்காரர்களுக்கு வேறு வேலை இல்லையா? இல்லை சிறுவன் என்னை கொள்ளுவதற்கு காரணம் தான் ஏது?
காலங்கள் மாறின காட்சிகள் மாறின கனவுகளும் மாறியது. கனவுகளும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்த்துவிட்டது. இவற்றில் ஒரு கனவை இங்கே பதிவு செய்கிறேன்.
எம்மண்ணில் கல்வி சேவை
கிராமத்து பள்ளிகளில் நான் கண்டு பயின்ற கல்வி, உடன் பயின்ற மாணாக்கரின் வறுமை, பராமரிப்பற்ற வளர்ப்பு என் மனதில் நன்று பதிந்தது. அந்த பள்ளியில் என் வகுப்பில் பயின்றோரில் நானும் என் உறவினன் ஒருவனும் தான் நல்ல ஒரு மேற் கல்வியை பெரும் சூழ்நிலை இருந்திருந்தது. வறுமை மற்றும் கல்விக்கான சூழல் இல்லாமை தான் அவர்கள் மேற்கல்வி பெறாததற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். இளமை கல் என்ற பொன்மொழி அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை போலும், தெரிந்தால் மட்டும் என்ன?
எம்மண்ணில் உள்ள பெரும்பாலனா கல்லூரிகளுக்கு மாணவர்களின் அறிவு பசியை உருவாக்கி அதற்க்கு தீனி போடும் ஞானம் இல்லை மாறாக பணத்தை சுரண்டும் தன்மை மேலிட்டிருந்தது. தேர்ச்சியை மட்டுமே குறி வைக்கும் மாணவன் அறிவிலியாகவே கல்லூரியிலிருந்து வெளிவருகிறான். நான் மட்டும் விதிவிளக்கா என்ன? என் கல்லுரி வாழ்வும் அவ்வாறே இருந்தது. ஆனால் ஒன்று இக்கருத்து சில அதிபுத்திசாலி மாணவருக்கு பொருந்தாது. சில நேரங்களில் இக்கல்வியை குருகுல கல்விமுறையுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தது உண்டு. அதுதானே இந்தியாவின் பழம்பெரும் கல்வி முறையும் கூட.
என்னையும் மதித்து ஒரு பெரிய நிறுவனம் எனக்கு வேலை கொடுத்தது. இந்த பட்டிக்காட்டு மனிதனுக்கு அந்த ஊதியம் மிகப்பெரிய தொகையாகதான் தெரிந்தது. என் பணிக்கு தேவையான அறிவை பெற ஐந்து மாத பயிற்சி அளிக்கப்பட்டது. நான்கு வருடங்களாக நான் பயின்ற பொறியியல் கல்வி சொல்லும் அளவு பயன்படவில்லை. எனது பயிற்சி பொழுதில் நான் உணர்ந்த மற்றும் மேதாவிகள் அறிந்திருந்த உண்மை என்னவென்றால், நமது கல்வி முறைக்கும், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதுதான்.
மூன்று வருட தகவல் தொழில்நுட்ப பணி வாழ்வில் எனக்கு கிடைத்த நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், என் மேலாளர்கள், பலருடன் நடந்த ஆலோசனைகள், மேற்கூறிய நான் வளர்ந்த சூழ்நிலை, இன்னும் பல என் முதற்கனவை உருவாகிவிட்டது. எம்மண்ணில் நான் அறிந்திருந்த, அறியப்போகும் குறைகளை களைந்த கல்வி சேவை செய்வதே அது. அதற்கான மேலான் திறமை, பொருளாதாரம், உலக அறிவு ஆகியவற்றை தேடும், என் கனவு பாதையில் சில பல தடங்கல்கள் இருப்பினும், என் கவனம் திசை மாறவில்லை என நம்புகிறேன். கனவுகளுடன் எனது முதுநிலை மேற்படிப்பை ஸ்வீடன் நாட்டில் தொடர்கிறேன்.
என் கனவுப்பாதையில் என்னுடன் பயணிக்கும் என் நண்பர்கள், முதலீட்டாளர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் வெற்றிக்கனியை உரித்தாக்குவேன். உங்களுக்கு என் நன்றிகள் கோடி. நான் துவளும் முன்பே என்னைத் தூக்கிநிறுத்தும் என் உடன்பிறவா சகோதரன் பாரி அவர்களுக்கு நன்றி.
கனவுப்பாதையில்
வந்தியதேவன்