Wednesday, 15 December 2010

அடையாளம் துறக்கின்றோம்

சில மாதங்களுக்கு முன்பு நான் பயின்ற மேல்நிலை பள்ளி அமைந்துள்ள பரந்தூர் கிராமத்திலிருந்து என் கிராமத்திற்கு நடந்து செல்ல நேர்ந்தது. பள்ளி சிறுவனாக நான் தினமும் நடந்து சென்ற அப்பாதையில், இயற்கை என் கண் முன் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்களும், சமுதாய தாக்கமும், என் சிந்தைக்கு வேலை கொடுத்தது. வேல மரங்கள் படர்ந்த பரந்தூர் ஏரி கரையோர சாலையில் அச்சிறு நடை பயணம் துவங்கியது. இடது புறம் நீர் நிறைந்த ஏரியின் கரையுமாய், வலது புறம் பசுமையான விளை நிலங்களுமாய் என் பிஞ்சு வயது விழிகளுக்கு விருந்தளித்த அவ்விடம் நேர் மாறாக வற்றிய எரியாய், நீரின்றி விவசாயம் மறந்த நிலங்களாய் காட்சி அளித்தன. நாள் முழுதும் மேய்ந்து களைப்பான மாடுகளை  ஒட்டிக்கொண்டு வீடு திரும்பும் மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

வழியில் பரந்தூர் எரி கலங்கள் தரை பலத்தை அடைந்தேன். என் பள்ளி வயது மழை காலங்களில், பாலத்தின் மேல் ஐந்து அடி வரை செல்லும் எரி வெள்ளமோ, துள்ளி குதிக்கும் கெண்டை மீன்களோ, மழையினால் விடுமுறை ஆகிப்போன பள்ளியிலிருந்து மீன் பிடிக்க வரும் மாணவர்களோ அங்கு காணவில்லை. அது போன்ற ஒரு காலத்தில் தான் என் நண்பர்கள் குழுவுடன் ஆடைகள் களைந்து எரி மதகில் குளித்து`விட்டு, மீன் பிடித்து மகிழ்ந்தோம், அன்று தானே அங்கு வந்த என் ராமன் பெரியப்பா எங்கள் ஆடைகளை எடுத்து சென்று என் வீட்டில் சொல்லிவிட்டார். பிறகு நாங்கள் அனைவரும் பிடித்த மீன்களுடன், ஆடைகளின்றி, சாலை வழிக்கு பதிலாக பசும் வயல்களின் வழியாக அனைவரும் அவரவர் வீட்டின் பின்புறத்தை சென்றடைந்தோம்.  இந்த நிகழ்வு நடந்தும், அது போன்றதொரு வெள்ளத்தை  பார்த்தும் பத்து வருடத்திற்க்கு மேல் இருந்த போதிலும் நினைவுகள் என்னை நீங்காதது நிதர்சனம் தானே?


 தரை பாலத்தை கடந்து என் கிராமத்தை நெருங்கி கொண்டிருந்தேன். சாலையின் இருமருங்கிலும் சீராக நிழல் தந்து கொண்டிருக்கும் புளியமரங்களை பார்த்துக்கொண்டு என் நடையை தொடர்ந்தேன்.  அதோ என் கண்ணில் அந்த இனிப்பு புளியம்பழ மரம் தென்பட்டது, ஆனால் முன்னர் போல் புளியம் பழம் பறித்து கொண்டிருக்கும் சிறுவர்கள் யாரும் இல்லை. வழியில் எதிரே வந்த என் பள்ளி தோழன் முத்துவிடம் நலம் விசாரித்து வணக்கத்துடன் விடை பெற்று தொடர்ந்தேன். மாடு மேய்ப்பது, விவசாயக் கூலி  என உள்ளூரில் பல முயற்சி செய்து பலனின்றி இப்போது முத்து தினக்கூலியாக பக்கத்துக்கு நகரத்துக்கு சென்று வருகிறான். மிக இளம் வயதிலேயே திருமணம் முடித்த அவனுக்கு இப்போது பள்ளி படிக்கும் இரு குழந்தைகள். குழந்தைகள் பக்கத்து நகரத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் நன்றாக படிப்பதாக அவன் சொல்ல கேட்டேன். விவசாயத்தில் வருமானம் குறைந்து விட்டதால் நகரத்திற்கு கூலியாக செல்வதாகவும், வரவுக்கு செலவு சரியாக இருப்பதாக கூறினான். 


கண்ணன் மாமாவின் கிணற்றையும், கோட்டைசாமி மாமாவின் கிணற்றையும் கடந்து என் கிராமத்திற்கு மிக அருகில் நடந்து கொண்டிருந்தேன். இந்த கிணறுகளில் தானே நான் நீச்சல் பழகினேன். தினமும் பள்ளி செல்லும் முன்பும், பள்ளி விட்டு வந்த பின்பும் நடந்த எரி குளியல்கள், கிணற்று குளியல்கள் நினைவுகளினால் என் நெஞ்சை ஈரமாகியது. இப்பொழுது கண்ணன் மாமாவின் கிணறு வற்றியிருந்தது, கோட்டைசாமி மாமாவின் கிணறு துந்து போய் பாழடைந்து இருந்தது.  ஊர் முழுதும் கிணறுகள் வற்றி போய் நிலக்கிழார்கள் ஆழ்துளை கிணறுகளுக்கு மாறியிருந்தார்கள். அரை மணிநேர நடைக்கு பின் எங்கள் தெருவை அடைந்தேன். தெருவில் நொண்டி ஆட்டம் ஆடும் சுட்டிகளோ, கோலி விளையாடும் வாண்டுகளோ, வீட்டு திண்ணைகளில் பல்லாங்குழி, தாயம் ஆடும் பெண்களோ யாரும் இல்லை. 


"மாமா எப்போ வாந்தீங்க?" கேட்டு கொண்டே வந்தான் என் மச்சான் வந்த விவரத்தை சொல்லிவிட்டு அவனிடம் நலம் விசாரித்தேன். "நல்ல இருக்கேன் மாமா. டென் ஸ்போர்ட்ஸ் ல ஜான் சீனா புரோக்ராம்க்கு டைம் ஆச்சு அப்பறம் வீட்டுக்கு வரேன்" என்று சொல்லிவிட்டு பறந்தான். வீட்டிற்கு சென்ற உணவு அருந்திவிட்டு அப்பாவிடம் சிறு விவாதம் நடந்தது. நிலத்தில் நடவு நட கூலி அதிகமாகிவிட்டதாகவும் சென்ற வெள்ளாமையில் நட்டமாகி விட்டத்தால் என் சம்பளத்தில் இருந்து ருபாய் ஐயாயிரம் கேட்டதால் வந்த விவாதம் தான் அது. என் கைபேசி வந்திருக்கும் குறுஞ்செய்திக்காக அலறியது. தகவல் தொழில்நுட்ப பொறியாளனான எனக்கு, என் மேலாளரிடம் இருந்து வந்த  செய்தியில் அடுத்த வெள்ளி கிழமைக்குள் புதிதாக கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அம்மாவிடம் காலை சீக்கிரம் எழுப்ப சொல்லி விட்டு உறங்கி போனேன்.


கனவுப்பாதையில்,
வந்தியதேவன்

Friday, 12 November 2010

ஒரு மரணம் ஒரு துவக்கம்

அன்று
என் வாழ்வின் மூன்று வயதிற்கும், பத்து வயதிற்கும் இடைப்பட்ட காலம் அது. கல்வி அறிவற்ற, சொற்பமான பணம் படைத்த குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை மாணவன், விடா முயற்சி, ஹாக்கி விளையாடும் திறன், சிறந்த கல்வி அறிவு, எதிலும் புதுமை, இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்த என் நெருங்கிய உறவினர் தான் என் கதாநாயகனாக திகழ்ந்தார். இன்று இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் அவர் பயின்ற கல்லூரியில் இவரின் திறமை கல்லூரியின் முதல்வர் வரை பிரபலம். லட்சியங்களை உறுதி செய்து அதற்கான முழு உழைப்பையும் களமிறக்கி பாடுபட அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் என் நெஞ்சில் பசு மரத்து ஆணியாக பதிந்துள்ளது. அவற்றை இப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. எதிலும் உண்மையாக முழு கவனம் செலுத்தி செயல்படும் என் உறவினனுக்கு, காதலும் அவ்வாறே நேர்ந்தது. அவள் பொய்யானவள், என்பதை ஜீரணிக்க முடியாதவன், பித்து பிடித்து தன் உயிரை மாய்த்து கொண்டான். லட்சிய பாதையால் பயணிக்கும் ஒருவனை திசை மாற்றி அவன் வாழ்வை முடிக்கும் சக்தி காதலுக்கு உண்டு என்பதை நான் அன்று தான் அறிந்தேன். அவரின் இறுதி மரியாதை அன்று அவருக்கு அமெரிக்கவில் இருந்து தொழில்நுட்பம் சார்ந்த சஞ்சிகை ஒன்று அனுப்பபட்டிருந்தது. அதை பார்த்து நான் பெற்ற உள்ளக்குமுறல்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று.

இன்று
நான் வளர்ந்து விட்டேன். இளநிலை பொறியியல் படிப்பையும், மூன்று ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப பணியையும் கடந்து விட்டேன். இதுவரை என் வாழ்வில், நட்பை கடந்த, காதலை நெருங்கிய, காதலை தொட்டு விட்ட, பெண்கள் இருந்தது உண்டு. அனால் இவற்றில் எதுவும் எனது லட்சிய பாதையில் மாற்றங்களை நிகழ்த்தவில்லை. என்னை என்றும் மனித உணர்வுகளிடம் இழக்காமல், அவற்றை மேல் அடுக்கிலிருந்து அனுபவித்து பயணிக்கும் என் லட்சிய பாதையின் துவக்கம் என் உறவினனின் மரணமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

கனவுப் பாதையில்,
வந்தியதேவன்


Tuesday, 5 October 2010

முதற்கனவே

இவ்வலைப்பதிவை எழுத துவங்கும் போது எனது பிள்ளை பிராய கனவு ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. அது ஒரு கனா காலம், ஆம் கிராமத்து சுழலில் நான் வளர்ந்த பள்ளி பருவம். ஒரு அதிகாலை வீட்டு கூடத்தில் படுத்திருந்தபோது என்னுள் ஒரு உணர்வு, யாரோ சதிகாரர்கள் என்னை கொல்வதற்காக வீட்டு முற்றத்தில் கோழி தன் குஞ்சுகளை அடை காப்பதற்காக வைய்திருந்த கவிழ்த்த கூடையினுள் வெடிகுண்டு வைத்திருப்பது போன்று. சட சடவென எழுந்து சென்று கூடையை திருந்தபின் தான் தெரிந்தது அதுவொரு கனவு என்று. வீட்டில் தூங்கிகொண்டிருந்தவர்கள் விழித்துததான் மிச்சம. இப்போது நினைத்தாலும் நகைப்பு தான் வருகிறது. சதிக்காரர்களுக்கு வேறு வேலை இல்லையா? இல்லை சிறுவன் என்னை கொள்ளுவதற்கு காரணம் தான் ஏது?

காலங்கள் மாறின காட்சிகள் மாறின கனவுகளும் மாறியது. கனவுகளும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்த்துவிட்டது. இவற்றில் ஒரு கனவை இங்கே பதிவு செய்கிறேன். 

எம்மண்ணில் கல்வி சேவை 

கிராமத்து பள்ளிகளில் நான் கண்டு பயின்ற கல்வி, உடன் பயின்ற மாணாக்கரின் வறுமை, பராமரிப்பற்ற வளர்ப்பு என் மனதில் நன்று பதிந்தது. அந்த பள்ளியில் என் வகுப்பில் பயின்றோரில் நானும் என் உறவினன் ஒருவனும் தான் நல்ல ஒரு மேற் கல்வியை பெரும் சூழ்நிலை இருந்திருந்தது. வறுமை மற்றும் கல்விக்கான சூழல் இல்லாமை தான் அவர்கள் மேற்கல்வி பெறாததற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். இளமை கல் என்ற பொன்மொழி அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை போலும், தெரிந்தால் மட்டும் என்ன?

எம்மண்ணில் உள்ள பெரும்பாலனா கல்லூரிகளுக்கு மாணவர்களின் அறிவு பசியை உருவாக்கி அதற்க்கு தீனி போடும் ஞானம் இல்லை மாறாக பணத்தை சுரண்டும் தன்மை மேலிட்டிருந்தது. தேர்ச்சியை மட்டுமே குறி வைக்கும் மாணவன் அறிவிலியாகவே கல்லூரியிலிருந்து வெளிவருகிறான். நான் மட்டும் விதிவிளக்கா என்ன? என் கல்லுரி வாழ்வும் அவ்வாறே இருந்தது. ஆனால் ஒன்று இக்கருத்து சில அதிபுத்திசாலி மாணவருக்கு பொருந்தாது. சில நேரங்களில் இக்கல்வியை குருகுல கல்விமுறையுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தது உண்டு. அதுதானே இந்தியாவின் பழம்பெரும் கல்வி முறையும் கூட.

என்னையும் மதித்து ஒரு பெரிய நிறுவனம் எனக்கு வேலை கொடுத்தது. இந்த பட்டிக்காட்டு மனிதனுக்கு அந்த ஊதியம் மிகப்பெரிய தொகையாகதான் தெரிந்தது. என் பணிக்கு தேவையான அறிவை பெற ஐந்து மாத பயிற்சி அளிக்கப்பட்டது. நான்கு வருடங்களாக நான் பயின்ற பொறியியல் கல்வி சொல்லும் அளவு பயன்படவில்லை. எனது பயிற்சி பொழுதில் நான் உணர்ந்த மற்றும் மேதாவிகள் அறிந்திருந்த உண்மை என்னவென்றால், நமது கல்வி முறைக்கும், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதுதான். 

மூன்று வருட தகவல் தொழில்நுட்ப பணி வாழ்வில் எனக்கு கிடைத்த நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், என் மேலாளர்கள், பலருடன் நடந்த ஆலோசனைகள், மேற்கூறிய நான் வளர்ந்த சூழ்நிலை, இன்னும் பல என் முதற்கனவை உருவாகிவிட்டது. எம்மண்ணில் நான் அறிந்திருந்த, அறியப்போகும் குறைகளை களைந்த கல்வி சேவை செய்வதே அது. அதற்கான மேலான் திறமை, பொருளாதாரம், உலக அறிவு ஆகியவற்றை தேடும், என் கனவு பாதையில் சில பல தடங்கல்கள் இருப்பினும், என் கவனம் திசை மாறவில்லை என நம்புகிறேன். கனவுகளுடன் எனது முதுநிலை மேற்படிப்பை ஸ்வீடன் நாட்டில் தொடர்கிறேன்.

என் கனவுப்பாதையில் என்னுடன் பயணிக்கும் என் நண்பர்கள், முதலீட்டாளர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் வெற்றிக்கனியை உரித்தாக்குவேன். உங்களுக்கு என் நன்றிகள் கோடி. நான் துவளும் முன்பே என்னைத் தூக்கிநிறுத்தும் என் உடன்பிறவா சகோதரன் பாரி அவர்களுக்கு நன்றி. 

கனவுப்பாதையில்
வந்தியதேவன்